பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தேனி : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியதால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.31 முதல் நவ.3 வரை அரசு விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. பள்ளி, கல்லுாரிகளுக்கு அக்.30 மதியம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற தொழில் நகரங்களில் பணிபுரிபவர்கள் மாவட்டத்திற்கு தீபாவளி கொண்டாட வந்திருந்தனர். விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால், பலர் நேற்று காலை முதல் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். குறிப்பாக திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாலையில் போடியில் இருந்து மதுரை சென்ற ரயிலிலும், இரவு சென்னை சென்ற ரயிலிலும், வழக்கத்தை விட அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்தனர்.