உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாய்க்கால்கள், மதகுகள் சேதம்: முதல் போக நாற்றாங்கால் அமைப்பதில் சிக்கல்

வாய்க்கால்கள், மதகுகள் சேதம்: முதல் போக நாற்றாங்கால் அமைப்பதில் சிக்கல்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாய்க்கால்கள், மதகுகள் சேதமடைந்துள்ள நிலையில் அடுத்து வரும் முதல் போகத்திற்கான நெற் நாற்றுக்களை வளர்க்க அமைக்கப்படும் நாற்றாங்கால்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நெல் பயிரிடும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த அக்.17 இரவு பெய்த கனமழையால் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேளாண், தோட்டக்கலை, வருவாய், புள்ளியியல் உள்ளிட்ட அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முதல் போக அறுவடை துவங்கியவுடன், வயலின் ஒரு பகுதியில் இரண்டாவது போகத்திற்கான நாற்றுகளை வளர்க்க விதை நெல் துாவி நாற்றாங்கால் அமைத்து நாற்றுகளை வளர்க்க துவங்குவர். அவ்வாறு நாற்றுகளை வளர்க்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் குள்ளப்பகவுண்டன் பட்டி மைக்ரோ பவர் ஹவுஸ் ஆற்றின் குறுக்கே கட்டியிருந்த தடுப்பணை உடைந்து சேதமாகிவிட்டது. இதனால் கம்பத்தில் 1400 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கும் சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நாற்றுக்களை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தடுப்பணையை சீரமைக்கவும் வாய்ப்பு இல்லை. எனவே சின்ன வாய்க்கால் பாசன பகுதியான 1400 ஏக்கருக்கு சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கம்பம் சுருளிப்பட்டி ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தலை மதகு உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் உத்தமுத்து வாய்க்கால் பாசன பகுதிகளிலும் 2ம் போகத்திற்கான நாற்றாங்கால் அமைக்க முடியாத அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !