சீனியாரிட்டி பட்டியல் வெளியிடக்கோரி விடியவிடிய காத்திருப்பு போராட்டம்
தேனி:தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பதவி உயர்வு சீனியாரிட்டி பட்டியல் வெளியிட கோரி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பதவி உயர்விற்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படவில்லை. 11க்கும் மேற்பட்ட துணைத் தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்துறையில் பணியாற்றும் குரூப் 4 அலுவலர்கள், குரூப் 2 நேரடி நியமன அலுவலர்களில் பதவி உயர்வு அளிப்பதில் சில ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் பதவி உயர்விற்கான சீனியாரிட்டி பட்டியில் வெளியிடாமல் இருப்பது, நீதிமன்ற வழக்கில் தாமதம் செய்யும் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விடிய விடிய தங்கினர். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அலைபேசி மூலம் பேசினார். ஆனால் சீனியாரிட்டி பட்டியில் வெளியிட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து போராட்டத்தை தொடர்கின்றனர். நேற்று கலெக்டர் அலுவலகம், உத்தமபாளையம், பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 5 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 129 வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆப்சென்ட் ஆகினர். இதனால் அரசு அலுவலங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.