டெங்கு ஒழிப்பு பணிக்காக வீடுகளில் ஆய்வுக்கு சென்ற பணியாளர்கள் தடுப்பு
கூடலுார்: டெங்கு தடுப்பு பணிக்காக வீட்டிற்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வந்த நகராட்சி தற்காலிக பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் அனுமதி மறுத்ததால் சிக்கல் ஏற்பட்டது.தொடர்ந்து பெய்த மழைக்குப் பின் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் வீடுகளுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக கூடலுார் நகராட்சி தற்காலிக பணியாளர்களான மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் அனைத்து வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கே.வி.ஆர். தெருவில் பணியாளர்கள் ஆய்வு செய்வதற்காக வீட்டிற்கு சென்ற போது உரிமையாளர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் தடுப்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. ஆய்வு செய்ய வருபவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி அறிவிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.