அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள் ஆடி வெள்ளியில் கூழ் பிரசாதம் வழங்கி வழிபாடு
தேனி: தேனி மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றி பெண்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்மன் தரிசனம் பெற மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் வளாகத்தில் கருப்பசாமி மண்டபம் அருகே பெண்கள் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆர்வமாக கூழ் வாங்கி குடித்தனர். பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை பெண்கள் கூட்டம் கோயில் வளாகத்தில் அலைமோதியது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.செயல் அலுவலர் கூறுகையில், ஞாயிறு அன்று ஜூலை 20ல் அம்மன் கோயில்களில் அரசு சார்பில் கூழ் ஊற்றப்படும்,' என்றார்.இதேபோல் தேனி சந்தை மாரியம்மன், பெரியகுளம் கவுமாரியம்மன், தேவதானப்பட்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட பல அம்மன் கோயில்களில் நடந்த ஆடி வெள்ளியில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.கூடலுார்: துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி முதலாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெண்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வடக்கு காளியம்மன் கோயில், கூடல் சுந்தரவேலவர் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.கம்பம்: கவுமாரியம்மன், சாமாண்டியம்மன், உத்தமபாளையம் ஞானம்மன், துர்க்கையம்மன், சின்னமனூர் சிவகாமியம்மன், க.புதுப் பட்டி மாரியம்மன், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில்களில் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பெண் கள் அம்மனை வழிபட்டனர். கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பெரியகுளம்: ஆடி வெள்ளிக்கிழமை முதல் வாரத்தை முன்னிட்டு, கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன், தெற்குரதவீதி காளியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.