உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் - தடையை மீறி கேட் திறந்ததற்கு எதிர்ப்பு

தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் - தடையை மீறி கேட் திறந்ததற்கு எதிர்ப்பு

கூடலுார்: கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் சுவாமி கும்பிடுவதற்கு தற்காலிக தடை விதித்து பூட்டிய கேட்டை திறந்து தனிநபர் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்கதாகும். கோயில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கோயிலை சீரமைக்க பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இருந்தபோதிலும் சிறப்பு பூஜை, ஆயிரம் விளக்கு பூஜை, 108 பொங்கல் என பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வளாகத்தில் சிவலிங்கம், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் புதிதாக வைத்து பீடம் அமைத்து தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அக். 27ல் மண்டலகால பூஜை பூஜைக்காக பக்தர்கள் சேவல், கிடா வெட்டி அன்னதானம் வழங்குவதற்காக கோயிலுக்கு வந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி, வார வழிபாட்டு குழு, பாரதிய கிசான் சங்கம் சார்பில் கூடலுார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிடா வெட்ட வந்த பக்தர்களை கோயிலுக்கு செல்ல அனுமதி மறுத்து போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் இப் பிரச்னையால் கோயிலில் சுவாமி கும்பிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு கோயில் கேட் பூட்டப்பட்டது. அதன் பின் பக்தர்கள் கேட்டுக்கு வெளியே நின்று சுவாமியை வணங்கிச் சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் நேற்று கோயிலை ஒட்டி விவசாயம் செய்பவர்கள் கேட்டின் பூட்டை திறந்து வளாகத்திற்குள் வாகனத்தை கொண்டு சென்று விவசாயப் பணியை மேற்கொண்டனர். தற்காலிக தடை விதித்து பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் பூட்டிய கேட்டை திறந்து பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நகராட்சி தலைவர் சின்னமாயன், பீஷ்மர் அறக்கட்டளை தலைவர் மலைச்சாமி மற்றும் பெண்கள் கோயிலுக்கு முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் வனிதா மணி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கூடலுார் தெற்கு போலீசில் புகார் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ