உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்துவதில் சிரமம்; ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை

ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்துவதில் சிரமம்; ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை

கம்பம்,: ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் பெரும்பாலானோர் ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று நேரடியாக வரி செலுத்துவதால், ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை அதிகரித்துள்ளது.ஊராட்சிகளில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலில் உள்ளது.ஊராட்சிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வரியை ஊராட்சி செயலர்களிடம் நேரில் சென்று செலுத்துவார்கள். அவர்கள் ரசீது வழங்குவார்கள். இது தான் நடைமுறை தற்போது ஆன்லைன் மூலம் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பல கிராமங்களில் இன்னமும் பலர் கல்வியறிவு இல்லாதவர்கள், கணிணி பயன்படுத்தாதவர்கள் கணிசமாக உள்ளனர். கிராமங்களில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்றாலும், ஒரு முறை வரி செலுத்த குறைந்தது ரூ.10 கட்டணமாக கேட்கின்றனர். இதை தவிர்க்க பலரும் மீண்டும் ஊராட்சி அலுவலகம் சென்று நேரில் வரி செலுத்தி வருகின்றனர்.இதனால் ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் வரி செலுத்துவது என்பது ஊராட்சிகளை பொறுத்தவரை இன்னமும் சரிவர பொதுமக்களால் பின்பற்ற முடியாத நிலை உள்ளது. சொத்துவரி ரொக்கமாக ஊராட்சிகளில் செலுத்தினாலும், வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தினாலும், அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள 'ஸ்டேட் நோடல் அக்கவுண்ட்' டிற்கு சென்று விடும், இதன் மூலம் வரி வருவாய் முறையாக கையாளப்படும் என்று ஊரக வளர்ச்சி வட்டாரங்கள் கூறுகின்றன.இது தொடர்பாக ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்துவது நல்ல நடைமுறை தான். ஆனால் கிராமங்களில் அதற்குரிய வசதிகள் இன்னமும் இல்லை. எனவே பெரும்பாலானவர்கள் நேரடியாக வந்து வரி செலுத்துகின்றனர். நாங்கள் ஆன்லைன் பதிவு செய்து ரசீதுகளை வழங்கி வருகிறோம். இதனால் ஊராட்சி செயலர்களுக்கு தான் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை