கனவு இல்லத்திற்கு பணி ஆணை வழங்கியும் பணம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் குமுறல்
தேனி: மாநில அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பணி ஆணை வழங்கி 4 மாதங்களாகியும் இதுவரை பணம் வழங்கவில்லை என ஆண்டிபட்டி கரட்டுபட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு வழங்கினர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆண்டிபட்டி தாலுகா கரட்டுபட்டி கண்ணன், மாரீஸ்வரி, நாகராணி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு எங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதனால் கடன் வாங்கி வீட்டு கட்டுமான பணிகளை துவங்கினோம். ஆனால், அரசு இதுவரை வீட்டிற்கான பணம் வழங்க வில்லை. பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.சர்வர் பிரச்னை:மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு பின் கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், நேற்று குறைதீர் கூட்டம் துவங்கிய போது சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நோட்டில் பதிவு செய்து மனுக்கள் வழங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பின் சர்வர் பிரச்னை சரிசெய்யப்பட்டது.