உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் அரசு ஊழியர்களுக்கான விடுதி அமைக்க இடம் தேர்வு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி தகவல்

பெண் அரசு ஊழியர்களுக்கான விடுதி அமைக்க இடம் தேர்வு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி தகவல்

தேனி: மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்குவதற்கான விடுதி அமைக்க இடத்தேர்வு நடந்து வருவதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி தெரிவித்தார்.மாவட்டத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது, முதியோர் பாதுகாப்பு, பெண் குழந்தை திருமணம் தடுத்தல், திருமண உதவித் திட்டங்கள், திருநங்கையர் நலவாரிய உதவிகள் உள்ளிட்ட நல திட்டங்கள் சமூக நலத்துறையால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த துறையின் செயல்பாடுகள் பற்றி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அளித்த பேட்டி.

துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து

புதுமைப்பெண், தமிழ்புதல்வன், 4 திருமண உதவித் திட்டங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திருமண உதவித் திட்டங்கள் பற்றி

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் தாய், தந்தை இழந்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டத்தில் மறுமணம் செய்யும் விதைவைப் பெண்ணிற்கு நிதி உதவி, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. ஈ.வெ.ரா., மணியம்மை நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் தொகையாக 8 கிராம் தங்கம், ரொக்கம் ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை மணப்பெண்ணின் தாயிடம் வழங்கப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டத்தில் கலப்பு திருமண செய்து கொள்பவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் கடந்தாண்டு 562 பேர் பயனடைந்து உள்ளனர்.

மாணவர்கள் உதவித் திட்டத்தில் பயனடைவோர் எண்ணிக்கை

அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் 2,151 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 4091 மாணவர்கள் பயனடைகின்றனர்.

தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் பற்றி

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் 18, மோட்டார் இல்லாத சாதாரண தையல் இயந்திரங்கள் 20 என 38 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பெண்கள், முதியோர் விடுதிகளில் ஆய்வு செய்கிறீர்களா

மாவட்டத்தில் 12 இடங்களில் முதியோர் பாதிகாப்பு இல்லங்கள், ஒரு பெண்கள் பாதுகாப்பகம் செயல்படுகிறது. இங்கு மாதந்தோறும் ஆய்வுகள் செய்கிறோம். இது தவிர மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக தேனி, சின்னமனுார் நகர் பகுதிகளில் 7 இடங்களில் விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளிலும் ஆய்வுகள் செய்து வருகிறோம். விடுதிகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் பற்றி

மூன்றாம் பாலினத்தவருக்கான (திருநங்கை, திருநம்பி) நல வாரியம் மூலம் சுயதொழில் துவங்க கடனுதவி, 40 வயதிற்கு மேல் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நல வாரியத்தில் 125 பேர் பதிவு செய்து உளளனர். இதில் 25 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 3 பேருக்கு தொழில் துவங்க கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இந்த நல வாரியத்தில் பதிவு செய்யலாம். அவர்களுக்கு இலவச கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்.

ஒருங்கிணைந்த சேவை மையம் பற்றி

குடும்ப வன்முறை, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. இங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் 5 நாட்கள் வரை தங்க வைக்கப்பட்டு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 448 பேருக்கு இந்த மையத்தில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை, பணியிடங்களில் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்கள் 181 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

சிறுவர், சிறுமி திருமணங்கள் நடக்கிறதே

இதனை தடுக்க பள்ளிகள், கல்லுாரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறு வயதில் செய்து கொள்ளும் திருமணங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்தாண்டு குழந்தை திருமணம் தொடர்பாக 161 புகார்கள் வந்தன. அதில் 128 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டன. நடந்த 33 திருமணங்கள் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தையல் கூட்டுறவு சங்கங்கள் பற்றி

மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் தையல் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 'செட்' சீருடை தைத்து வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் மாணவர்களின் உடைகள் அளவு எடுத்து, தைத்து வழங்கப்படுகிறது. தையல் கூலியாக முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சட்டைக்கு ரூ.22.05, டவுசர் ரூ.22.05, மாணவிகளுக்கு பாவடை ரூ.16.54, சட்டை ரூ.19.85 வழங்கப்படுகிறது. அதே போல் 5ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்கள் சட்டைக்கு ரூ. 27.56, பேண்ட் ரூ.55.13, மாணவிகள் சுடிதாருக்கு ரூ.55.13, கோட் ரூ.25 என தையல் கூலி பணிபுரிபவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரு பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் 18 வயதிற்கு மேல் அந்த திட்டத்தின் முதிர்வு தொகையை எடுத்து அவர்களின் கல்விச் செலவு, திருமண செலவிற்கு பயன்படுத்தலாம். கடந்தாண்டு 1770 பேர் முதிர்வுத் தொகை பெற்றுள்ளனர். புதிதாக 818 பேர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

திட்டங்களில் பயன்பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களில் பயன் பெற இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் பெற கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விபரங்கள் பெற்று, பயனடையலாம்., என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை