மாவட்ட விளையாட்டு அலுவலகம் முற்றுகை
தேனி : ''மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஞாயிறுதோறும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.'' என, விளையாட்டு வீரர்கள், பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.தேனி பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம், அலுவலகம் உள்ளது. இந்நிலையில், 'ஞாயிறுதோறும் பயிற்சிக்கு அனுமதிக்காததை கண்டித்தும், வரும் வாரங்களில் அனுமதிக்க வேண்டும்,' என்பதை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை முற்றுகை இட்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் முறையிடுவதற்காக முகாம் அலுவலகத்தில் குவிந்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வெளியில் சென்றிருந்ததால் மீண்டும் விளையாட்டு அலுவலகம் திரும்பினர். இன்று குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க உள்ளதாக கூறி பெற்றோர்கள், வீரர்கள் கலைந்து சென்றனர்.ஞாயிற்று கிழமைகளில் வீரர்களை அனுமதிக்காதது பற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஞாயிறு விடுமுறையாகும். மேலும் சிலமாதங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று விளையாட்டு அலுவலகம் முன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் மாரடைப்பால் இறந்தார். விளையாட்டு அலுவலகத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட யாரும் இல்லாத நிலை இருப்பதால் அனுமதிக்க வில்லை. இதுபற்றி மைதானத்தில் தனியாக பயிற்சி அளிக்கும் சிலரிடம் கூறியிருந்தோம். அவர்களும் அதனை ஏற்றிருந்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் மைதானத்திற்குள் சென்று பயிற்சி வழங்கியதால், மற்றொரு தரப்பினர் முற்றுகையிட்டனர். பின் கலெக்டர் அறிவுறுத்தலில், அனைவரும் மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது என்றார்.