தேனியில் ‛வார்டு சபை கூட்டம் தி.மு.க., கவுன்சிலர் போர்க்கொடி
தேனி: தேனி நகராட்சியில் வார்டில் வளர்ச்சி பணி நடைபெறாததால் வார்டுசபை கூட்டம் நடத்த மாட்டேன் என தி.மு.க.,கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி போர்க்கொடி துாக்கி உள்ளார். நகராட்சி, பேரூராட்சிகளில் நாளை முதல் அக்., 29 வரை வார்டு சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மூன்று நாட்களில் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வார்டிற்கு உட்பட்டபகுதியில் அங்கன்வாடி மையம், ரேஷன்கடை கட்டித்தர பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. கட்சி தலைமையில் விளக்கம் கேட்டாலும் நகராட்சியில் வழங்கிய கோரிக்கைகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கூற தயாராக உள்ளேன்,' என்றார். இது தொடர்பாக நகராட்சி கமிஷனர் பார்கவியை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை.