மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறைத் தலைவர் பாலாஜியை ஒரு நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு, செய்து போராட்டம் நடத்துகின்றனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மருத்துவ மாணவர்கள் தங்கள் பணிகளை புறக்கணிப்பு செய்து நேற்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக அரசு டாக்டர்கள் சங்க அவைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் அரவாழி, தலைவர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற வார்டுகள், புற நோயாளி பிரிவுகளில் பணிகளை புறக்கணித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துவது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு தமிழக அரசு டாக்டர்கள் சங்க துணைச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், சிவா, பாலகிருஷ்ணன், ஜெகதீஷ் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் பணி புறக்கணித்தவர்கள் தவிர, அவசர சிகிச்சையில் பணிபுரிந்த டாக்டர்கள், நர்ஸ்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.