உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்ததால் குடிநீருக்கு தவிப்பு

உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்ததால் குடிநீருக்கு தவிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகாவில் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்ததால் பல கிராமங்களில் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்கிணறுகள் போர்வெல்களில் கிடைக்கும் உப்பு நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 18 கிராம ஊராட்சிகள் உள்ளன. 48 ஊராட்சிகளிலும் 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மூல வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் நீரை பம்ப் செய்து குழாய் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மூல வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லை. இதனால் குடிநீர் ஆதாரமாக உள்ள உறை கிணறுகள் பலவற்றிலும் நீர் சுரப்பு குறைந்துவிட்டது. கிடைக்கும் குறைந்த அளவு நீரை அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்க முடியாததால் பல கிராமங்களில் பொதுமக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர். ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வைகை அணை அருகே பிக்கப் அணையில் இருந்து குடிநீரை சுத்திகரிப்பு செய்து இரு ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் பணிகள் முழு அளவில் முடிந்தும் குடிநீர் விநியோகம் பல கிராமங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் கோடையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: வருஷநாடு முதல் குன்னூர் வரை மூல வைகை ஆற்றில் பல இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் தொடர்ச்சியான நீர் வரத்து இருந்தால் உறை கிணறுகளில் தேவையான அளவு நீர் சுரப்பு கிடைக்கும். மழையின்மையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லை. இதனால் உறை கிணறுகளில் குறைவாக நீர் சுரக்கிறது. ஊராட்சிகளில் குடிநீர் மின் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் தேவை. ஊராட்சிகளில் மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கிடைப்பதில்லை. இதனால் குடிநீரை பம்பு செய்வதில் பல சிரமங்கள் ஏற்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணி, குழாய் பதிப்பு பணிகள் முடிந்தாலும் பல கிராமங்களில் இணைப்புகள் முழுமை பெறவில்லை. இதனால் திட்டத்தின் பயன்கள் பொதுமக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை. ஊராட்சிகளில் போர்வெல், பொதுக்கிணறுகளில் கிடைக்கும் நிலத்தடி நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வாரியம், உள்ளாட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்து அனைத்து கிராமங்களுக்கும் போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !