| ADDED : நவ 27, 2025 06:07 AM
போடி: போடி நகர் பகுதியில் திருட்டு, குற்ற செயல்களில் ஈடுபடும் நபரை எளிதில் கண்டறிய ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இன்றி உள்ளன. இந்நகர் பகுதியில் திருட்டு, விதிமீறல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய ரூ.2 லட்சம் செலவில் போடி பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலை, கட்ட பொம்மன் சிலை, பரமசிவன் கோயில் ரோடு, மீனாட்சி தியேட்டர் லைன், பி.ஹைச்., ரோடு, நகைக்கடை பஜார், கருப்பசாமி கோயில் ரோடு உள்ளிட்ட பகுதியில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அப்போது போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் பட்டா கத்தியை காண்பித்து பட்ட பகலில் கொள்ளையர்கள், நகை பையை பறித்துச் சென்றனர். இச்சம்பவம் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது. இதனால் குற்றவாளியை போலீசார் எளிதில், கைது செய்ய உதவியாக இருந்தது. அதன் பின் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வில்லை. தற்போது கேமராக்கள் பயன்பாடு இன்றி உள்ளன. இதனால் போடி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தை அருகே கருப்பசாமி கோயில் தெரு பகுதியில் மது விற்பனை, ஈவ்டீசிங் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. குற்றச் செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடுவோரை கண்டறிய பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.