ஆண்டிபட்டியில் யானைகள் நடமாட்டம் 5 கி.மீ.,நீளத்திற்கு அகழி அமைக்க திட்டம்: தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தல்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விளை நிலங்களில் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் பயிர்களுக்கு பாதிப்பை தவிர்க்க இப்பகுதியில் 5 கி.மீ.,நீளத்தில் அகழி அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.ஆண்டிபட்டியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது ஏத்தக்கோவில் கிராமம். சபரிமலை சீசனில் யானைகள் இப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். சில ஆண்டுகளாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடர்கிறது. இப்பகுதிக்கு வந்து செல்லும் யானைகள் மலையை ஒட்டியுள்ள விளை நிலங்களில் தென்னை, மா மரங்கள் சேதப்படுத்தி உள்ளது. யானைகளால் விளைநிலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க இப்பகுதியில் 5 கி.மீ., துாரத்திற்கு அகழி அமைக்க வனத்துறை அதற்கான சர்வே பணிகளும் முடிந்துள்ளன. ரூ.1.26 லட்சம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு
ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் கூறியதாவது: மனித விலங்கு மோதல் குறித்து மாநில திட்ட குழு சார்பில் யானைகள் குறித்த ஆராய்ச்சியாளர் முனைவர் சிவகணேசன் தலைமையிலான குழுவினர் ஆண்டிபட்டி பகுதியில் யானைகள் நடமாட்டம் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் வரையில் இப்பகுதியில் யானைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியிலும் யானைகள் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இதுவரை ரூ.ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 451 நஷ்ட ஈடாக 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. யானைகள் விளை நிலங்களுக்கு வந்தால் விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சத்தமாக ஒலி எழுப்புதல், வெடி வெடித்தல் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். இப்பகுதியில் மேக்கிழார்பட்டி அருகே சந்தை மலையில் துவங்கி ருத்ராயப்பெருமாள் கோயில், அனுப்பபட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தகோவில், மறவபட்டி வரை வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் வனத்துறை ஏற்பாட்டில் அகழி அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.