வனங்களில் முளைத்துள்ள அந்நிய களைச்செடிகள் அழிப்பு: 360 எக்டேரில் அகற்றிய வனத்துறை அதிகாரிகள்
தேனி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் மாவட்ட வன அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட வனச்சரக காப்புக் காடுகள், அதனை ஒட்டியுள்ள இடங்களில் உணவு சங்கிலி நடைமுறைக்கும், வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள சீகை, பைன், உன்னிச்செடிகள் (Lantana Camara) உள்ளிட்ட களைச்செடிகளை 360 எக்டேரில் உள்ளதை வனத்துறை அதிகாரிகள் கணடறிந்தனர். இவற்றை வனத்துறையினர் அழித்து வன பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வனவளம் பெருக, உணவு சங்கலி நடைமுறை சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெற முடியும். இவ்வாறு தண்ணீர் தேவை மட்டும் இன்றி வனங்களில் உள்ள வனவிலங்குகளல் தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய விலங்குகள் மரம், செடி, கொடி, புல், முதலியவற்றை உண்டு உயிர்வாழும். இதில் ஆடு, மாடு, எருமை, மான், யானை , குதிரை, வரிக்குதிரை போன்றவையாகும். இதுதவிர வனங்களில் மாமிசத்தை உண்ணும் ஊன் உண்ணிகள் (Carnovore) எனும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, ஓநாய், வங்கு (கழுதைப்புலி) உள்ளிட்டவை அடங்கும். களைச்செடிகளால் ஆபத்து மாவட்ட வன அலுவலர் அருண்குமார் கூறியதாவது: தேனி மாவட்ட வனங்களில் அந்நிய நாட்டு களைச் செடிகளான உன்னிச்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவை முள் செடியாக வளர்வதாலும், மரமாகவும், கொடிகளாவும் வளராமல் செடியாக மட்டுமே பரவலாக வளர்ந்து தாவர உண்ணிகளாக உள்ள விலங்கினங்களுக்கு தேவையான தாவரங்கள் வளர தடையாக உள்ளது. மேலும் விலங்கின வாழ்விட பரப்பை குறைக்கிறது. இதனால் உணவுச் சங்கிலி நடைமுறைக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த களைச் செடிகள் வளர்வதால் பிற தாவரங்களும் பரவலாக வளர முடியாத நிலை ஏற்படுகிறது. வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றம் அந்த களைச் செடிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் 360 எக்டேர் அளவில் வளர்ந்துள்ள களைச்செடிகளை அகற்றி உள்ளோம். எஞ்சிய 150 எக்டேரில் உள்ள களைச்செடிகளை அகற்றும் பணியில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.