உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறு புனல் நீர்மின் நிலையத்தில் புகுந்த மழை வௌ்ள நீரால் மூழ்கிய இயந்திரங்கள் செயற்பொறியாளர் ஆய்வு, தப்பி ஓடி பிழைத்த ஊழியர்கள்

சிறு புனல் நீர்மின் நிலையத்தில் புகுந்த மழை வௌ்ள நீரால் மூழ்கிய இயந்திரங்கள் செயற்பொறியாளர் ஆய்வு, தப்பி ஓடி பிழைத்த ஊழியர்கள்

கம்பம்: கம்பம் அருகே சிறு புனல் நீர்மின் நிலையம் என அழைக்கப்படும் 'மைக்ரோ பவர் ஹவுஸ்' மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சேத மதிப்பு பல கோடி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் லோயர்கேம்ப் குறுவனுாத்து பாலத்தில் முதல் 'மைக்ரோ பவர் ஹவுஸ்' கட்டப்பட்டு மின் உற்பத்தி துவங்கியது. தொடர்ந்து காஞ்சி மரத்துறை, குள்ளப்பகவுண்டன்பட்டி உட்பட 4 மைக்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றும் தலா 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாகும். கடந்த அக்.17ல் பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ள நீர், குள்ளப்ப கவுண்டன்பட்டி மைக்ரோ மின் நிலையத்திற்குள் புகுந்தது. இந்த மின் நிலையத்தில் 2 இயந்திரங்கள், 2 சிறிய ஜெனரேட்டர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மழை நீர் உள்ளே புகுந்ததால் ஒட்டுமொத்த மின் நிலையத்தின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு ஊழியர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். மின் நிலைய கட்டடத்திற்குள் 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் பெரியார் வைகை கோட்ட செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். முதலில் மின் நிலையத்திற்குள் தேங்கியுள்ள மழை வெள்ள நீரை வெளியேற்றிய பின் தான் இயந்திரங்களின் நிலை பற்றி தெரியும் என பொறியாளர்கள் தெரிவித்தனர். கடந்த அக்.17 முதல் மின் உற்பத்தி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ