மாவட்ட மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்க எதிர்பார்ப்பு: தனியார் மையங்களுக்கு சென்று வர நோயாளிகள் சிரமம்
நுாற்றாண்டு கண்ட பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பெரியகுளம் தாலுகா மட்டுமின்றி மாவட்டம் முழுவதில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். தினமும் 1200 க்கும் அதிகமான வெளிநோயாளிகளும், 200க்கும் அதிகமான உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிடி ஸ்கேன், டாப்ளர் ஸ்கேன், எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவாதம், தலைக் காயம், எலும்பு, நரம்பு, தசைகள், வயிறு போன்ற உடல் உள்ளுறுப்புகள் பாதித்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருக்கு துல்லியமாக பாதிப்பை கண்டறிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லை. இவர்கள் தேனிக்கு தனியார் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனைக்கு ஆட்டோ, கார்களில் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. நோயாளிகளின் அவசரத்திற்கு ஏற்ப ஆம்புலன்ஸ் கிடைப்பது இல்லை. இதனால் கூடுதல் கட்டணம் செலவு செய்து வாடகை வாகனங்களில் சென்று வருகின்றனர். அலைக்கழிப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைப்பதற்கு பணி நடந்து வருகிறது. அதனால் அங்கிருந்து தனியார் ஸ்கேன் மையத்திற்கு நோயாளிகளை ஆம்புலன்சில் அனுப்புகின்றனர். இப் பரிசோதனை காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளலாம். ஆனால் காப்பீட்டு திட்டத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் உடனே எடுக்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் நோயாளிகள் அலைந்த பின் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.2500 பெற்று எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்படுகிறது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையிலிருந்து தினமும் உள்நோயாளிகள் பலரும் தேனிக்கு தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று வரு கின்றனர். இதுகுறித்து கண்காணிப்பாளர் குமார் கூறுகையில்,' சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளோம்,' என்றார்.