பதிவு இடங்களை விட ரோட்டோரம் சிம்கார்டு விற்பனை தாராளம் ; ஆன்லைன் லாட்டரிக்கு பயன்படும் போலி சிம்கார்டுகள்
-பெரியகுளம்: மாவட்டத்தில் பதிவு செய்த இடங்களை தவிர்த்து ரோட்டோரம் சிம்கார்டு விற்பனை அதிகரித்து வருகிறது. ஆதார் ஆவணங்கள் பெற்று போலி சிம்கார்டு மூலம் ஆன்லைன் லாட்டரிக்கு பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் சாலையோரங்களில் பலர் அலைபேசிக்கான சிம் கார்டுகளை விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு சிம்கார்டு விற்பனை செய்யும் சிலர் முறையாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ரோட்டோரம் சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்களின் ஏஜென்ட்டுக்கான இருப்பிடம் வேறு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் பலர் பதிவு செய்த இடத்தில் சிம்கார்டு விற்பனை செய்யாமல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தாலுகா அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், பஜார்வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு குடை விரித்து வியாபாரம் செய்கின்றனர். குறைந்த விலைக்கு சிம்கார்ட் வாங்கும் கிராமமக்கள் தங்கள் ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்ட சில அடையாள ஆவணங்களை ரோட்டோரம் விற்பனை செய்வோரிடம் ஒப்படைப்பர். இதன் மூலம் அவர்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு ஒரு சிம்கார்டை ஆக்டிவேட் செய்வது வழங்கி விட்டு அதே அடையாள ஆவணங்களை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து வைத்து கொள்வார்கள். மற்றவர்களில் பெயரில் போலி சிம் கார்டுகள் உருவாக்க வாய்ப்புள்ளது ப்படுகின்றன என புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை இருந்தாலும் பல மாவட்டத்தில்வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அனுமதியின்றி அதிகளவில் விற்பனை நடக்கிறது. இத் தொழிலுக்கு கேரளா ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பவர்கள் போலி சிம்கார்டுகளை அதிக ரூபாய் கொடுத்து வாங்கி, இங்கு தங்களது லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்துகின்றனர். லாட்டரியில் கிடைக்கும் பரிசுகள் ஆன்லைன் மூலம் போலி சிம்கார்டுகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது.