உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலவம் காய்க்கு விலை இன்றி விவசாயிகள் கவலை காய்களை பறிக்காமல் வீணாகும் அவலம்

இலவம் காய்க்கு விலை இன்றி விவசாயிகள் கவலை காய்களை பறிக்காமல் வீணாகும் அவலம்

போடி: தேனி மாவட்டத்தில் இலவம் காய் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.மாவட்டத்தில் போடி, குரங்கணி, கொட்டகுடி, வலசத்துறை, வடக்குமலை, வருஷநாடு பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி உள்ளன. ஏப், மே, ஜூன் மாதம் இலவம் காய் சீசனாகும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு நல்லமழை கிடைத்ததால் இந்த ஆண்டு இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இருஆண்டுகளுக்கு முன்பு விதைப் பஞ்சு கிலோ ரூ.65 முதல் ரூ.70 ஆகவும், சில்லறையில் கிலோ ரூ. 60 முதல் ரூ.65 ஆகவும், அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ. 250 முதல் ரூ.270 விலை இருந்தது. கடந்த ஆண்டு விதைபஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையும், சில்லரையில்ரூ.50 முதல் ரூ.55 வரை இருந்தது. அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை இருந்தது.இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்து உரிய விலை இல்லை. தற்போது விதைப்பஞ்சு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரையும், சில்லரையில் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை உள்ளது. அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். உரிய விலை இல்லாததால் விவசாயிகள் மரத்தில் காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். தற்போது காற்று காலம் துவங்கியுள்ளதால் பறிக்காமல் விடப்பட்ட காய்கள் வெடித்து, அதில் உள்ள இலவம் பஞ்சு வீணாக காற்றில் பறந்து செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில் : இலவம் காய்க்கு போதிய விலை இல்லை. காய் பறிப்பு, உடைப்பு கூலிக்கு கூட கட்டுபடியான விலை இல்லை. இதனால் காய்களை பறிக்காமல் விட்டுள்ளோம். விவசாயிகள் பயன் பெறும் வகையில் போடியில் இலவம் பஞ்சு தொழிற்சாலை அமைத்து, உரிய விலைக்கு அரசே கொள்முதல் செய்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ