மீன் பிடி ஏலத்தொகையில் 50 சதவீதம் கண்மாய் பராமரிக்க வழங்க வேண்டும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்
சின்னமனூர்: மீன்பிடி ஏலத் தொகையில் 50 சதவீதத்தை வாய்க்கால், மடைகள் பராமரிப்பிற்காக விவசாய சங்கத்திற்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சின்னமனூர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா கூறியதாவது:சின்னமனுார் உடையகுளம் கண்மாய் மீன்பாசி ஏலத்தொகையில் 50 சதவீதத்தை வாய்க்கால் கரை, மடைகள் பராமரிப்பு செலவிற்காக வழங்க நீண்ட காலமாக கோரிவருகிறோம். கண்மாய் பராமரிப்பு செலவிற்கு பணம் இன்றி விவசாய சங்கம் இக்கட்டான நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கும், ஏலதாரருக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. எனவே, உடையகுளம் மீன்பாசி ஏலத்தை நீர்ப்பாசன துறை மூலம் விவசாய சங்கத்திற்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும்பட்சத்தில் கண்மாய் கரைகள், வாய்க்கால் கரைகள், மடைகள் பராமரிப்பு எளிதாக நடைபெறும். மீன்பாசி ஏலத்தொகையில் 50 சதவீதத்தை வழங்க அரசாணை உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். 10 ஆண்டுகளாக இதனை கோரி வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கண்மாய்கள் பராமரிப்பிற்கு அரசும் நிதி ஒதுக்கீடுகள் செய்வதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்றார்.