மேலும் செய்திகள்
பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
01-Aug-2025
கூடலுார்: 18ம் கால்வாயை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் செப்.7 ல் கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 2010ல் துவக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டது. 47 கி.மீ., துாரம் கொண்ட இக்கால்வாயில் ஆண்டு தோறும் அக்டோபரில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலை மதகு பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் கால்வாயை ஒட்டியுள்ள 44 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் 4,615 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை பொறுத்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தும், 2 மாதம் தாமதமாக டிசம்பரில் திறக்கப்பட்டது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டவுடன் கரைப்பகுதி சேதமடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. தற்காலிகமாக மணல் மூடையை அடுக்கி சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் புலம்பினர். கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றி கரைப்பகுதிகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கால்வாய் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும், இதுவரை சீரமைப்புப் பணிகள் துவங்கவில்லை. அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ள நிலையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் கால்வாய் சீரமைக்காமல் இருப்பதால் மீண்டும் கரை உடையும் அபாயம் உள்ளது. அதனால் விரைவில் கரைப்பகுதியை சீரமைக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் செப்.7ல் கால்வாய்க்குள் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
01-Aug-2025