ரோட்டின் இருபுறமும் வளர்ந்த முட்செடிகளால் விவசாயிகள் சிரமம்
போடி: போடி அருகே ராசிங்காபுரம் - மல்லிங்கர் சாமி கோயில் கரடு செல்லும் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.ராசிங்கபுரம் குளத்துப் பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் மல்லிங்கர்சாமி கோயில் கரடு, ஜக்கம்மாள் கோயில் பகுதி அமைந்து உள்ளது. பள்ளி, கண்மாய் உள்ளிட்ட பகுதியும் இப்பாதையில் அமைந்து உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றனர். ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விவசாயிகள் விளை பொருள்களை கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.ரோட்டின் இருபுறமும் சூழ்ந்து உள்ள முட்செடிகளை அகற்றி, ரோடு வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.