கோடை சாகுபடிக்கு போதிய நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி:
ஆண்டிபட்டி: கோடை சாகுபடிக்கு தேவையான நிலத்தடி நீர் இருப்பில் உள்ளதால் இறவை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளில் சுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளன. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடுகின்றனர். இறவை பாசன நிலங்களில் ஆண்டுக்கு இரு போகம் விவசாயம் நடந்து வருகிறது. வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம் கிராமங்கள் மூல வைகை ஆற்றின் கரைகளிலும், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யனத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரைகளிலும் உள்ளன. 15 க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தேங்கும் நீரை ஆதாரமாகக் கொண்டு பல கிராமங்களில் விவசாய பணிகள் தொடர்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு வடகிழக்கு பருவமழையால் ஆண்டிபட்டி பகுதியில் ஆறுகள் ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து சில மாதங்கள் நீர் சென்றதால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. மழை, இருப்பில் இருந்த நீர் ஆதாரம் இவற்றை பயன்படுத்தி நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் சாகுபடியை தொடர்ந்தனார். குளங்கள், கண்மாய்களில் தேங்கிய நீர், அடுத்தடுத்து பெய்துள்ள கோடை மழையால் இந்தாண்டு நிலத்தடி நீர் ஆதாரம் சமன் செய்யப்பட்டுள்ளது. பாசனக்கிணறுகள், போர்வெல்களில் கோடையிலும் வற்றாமல் நீர் சுரப்பு தொடர்வதால் இந்த ஆண்டு கோடை காலத்திலும் பாதிப்பில்லாத விவசாயம் தொடர்கிறது.விவசாயிகள் கூறியதாவது: ஏப்ரல், மே மாதங்களில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் விவசாய பணிகளில் மந்த நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையை காரணமாக வைத்து விவசாயிகள் வழக்கமான அளவைவிட கோடையில் பாசன பரப்பை குறைத்து விடுவர். நடப்பு பருவத்தில் கோடை வெயிலால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லை. கிணறுகள் ஆழ்துளை குழாய்களில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளன. இதனால் கோடையிலும் பல விவசாயிகள் நெல், காய்கறிகள், பூக்கள் சாகுபடியை தொடர்கின்றனர். இறவை பாசன நிலங்களில் கோடை விவசாயம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது என்றனர்.