நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
போடி: போடி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். போடி அருகே சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்காபுரம், குண்டநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழை பெய்யும் காலங்களில் நிலக்கடலை, மொச்சை, சிறு தானியங்கள், பயிரிடுவது வழக்கம். தற்போது தொடர் கன மழையால் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. மழையால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். நிலக்கடலையை பொறுத்த வரை நடவு செய்து 110 நாட்களில் பலன் கிடைக்கும் என்பதால் நிலக்கடலை சாகுபடி செய்வதில் தற்போது விவசாயிகள் மும்முரம் காட்டி வரு கின்றனர்.