உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆகாயத்தாமரையால் நீரை தேக்க முடியாத நிலை தாமரைக்குளம் கண்மாய் விவசாயிகள் சிரமம்

ஆகாயத்தாமரையால் நீரை தேக்க முடியாத நிலை தாமரைக்குளம் கண்மாய் விவசாயிகள் சிரமம்

உத்தமபாளையம்: நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கோடை காலங்களில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு குடிநீர், பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான தண்ணீரை தேக்கி வைக்க ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் சிறியதும், பெரியதுமாக ஏற்படுத்தப்பட்டது.உத்தமபாளையத்தில் ராமசாமி நாயக்கன்பட்டியையும், கோகிலாபுரத்தையும் இணைக்கும் தாமரைக்குளம் கண்மாய் 65 ஏக்கர் பரப்பிலானது. உத்தமபாளையம் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். நெல், காய்கறிகள், திராட்சை, வாழை அதிகம் சாகுபடியாகிறது. நெல் சாகுபடி ஆற்று பாசனத்திலும், காய்கறி, வாழை, திராட்சை பயிர்கள் இறவை பாசனத்தில் நடைபெறுகிறது. கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, ஒத்தப்பட்டி, பரமத்தேவன்பட்டி போன்ற கிராமங்களில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க தாமரைக்குளம் கண்மாய் பயன்படுகிறது. அத்துடன் பாளையம் பரவு பகுதியில் 500 ஏக்கர் வரை நெல் சாகுபடிக்கும் பயன்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி நிதி உதவியுடன் தாமரைக்குளம் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முறையாக நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு அப்படியே அமுங்கி போனது.தற்போது கண்மாய் தூர் வாரும் பணி செய்யப்படாததால், கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாயின் 50 சதவீத பகுதி மறைந்துள்ளது. எஞ்சிய பகுதியில் ஆகாயத்தாமரை வளர்ந்து விவசாயத்திற்கான நீரை ேதக்க முடியாத நிலை உள்ளது. மற்றொரு புறம் நீர் பிடிப்பு பகுதியினை ஆக்கிரமித்து தென்னந்தோப்புகளாகவும், நெல் வயல்களாக மாறியுள்ளது. கண்மாய் பாதுகாக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்

ஆக்கிரமிப்பால் விவசாயம் பாதிப்பு

மனோகரன், சமூக ஆர்வலர், உத்தமபாளையம் :தாமரைக்குளம் கண்மாய் பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் விவசாயிகள் பாதிக்கின்றனர். சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தோட்ட கிணறுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கோடை காலங்களில் கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படும் இந்த கண்மாய் முறையாக பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

ராஜபாண்டி,இயற்கை ஆர்வலர் , உத்தமபாளையம்:கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழு அளவில் நீர் தேக்க வேண்டும். நீர் தேங்கும் பரப்பளவு குறைந்ததால் பாசனத்திற்கு நம்பியுள்ள பாளையம் பரவு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகாயத்தாமரையை அகற்றிட கல்லூரி என். சி.சி. மற்றும் என்.எஸ். எஸ். மாணவர்களின் உதவியை நாடலாம். முதலில் சர்வே செய்து, நான்கு மால் நிர்ணயம் செய்ய வேண்டும். - நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களின் சாகுபடிக்கு பயன்படும் இந்த கண்மாயை முழுமையாக பராமரிப்பு செய்ய நீர்வளத்துறை முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை