உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண்குளத்தில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு ஒரே இடத்தில் ஆழமாக எடுப்பதால் பாதிப்பு

வேளாண்குளத்தில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு ஒரே இடத்தில் ஆழமாக எடுப்பதால் பாதிப்பு

பெரியகுளம் : வேளாண்குளத்தில் 30 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் வடகரை பகுதியில் வேளாண்குளம் உள்ளது. இந்த கண்மாய் நீரினால் 500ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர். கண்மாயில் அதிக தண்ணீர் தேங்குவதற்கு, மண் எடுக்க நீர்வளத்துறை அனுமதி அளித்தது. இதனால் இப் பகுதி விவசாயிகள் கண்மாயில் மண்ணை எடுத்து அவர்களது நிலங்களில் கொட்டி வந்தனர். கண்மாயில் ஒரே இடத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் வெட்டி எடுக்கப்பட்டதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நடுப்புரவு விவசாயிகள் சங்கத்தினர், மண்வெட்ட வந்தவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து மண் அள்ளுவதை தடுத்து நீர்வளத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். வேளாண்குளத்திற்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன் வருவதாக தெரிவித்தனர். இதனை அறிந்து கண்மாயில் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர்களுடன், வந்தவர்கள் அங்கிருந்து சென்றனர். அங்கு வந்த உதவி செயற்பொறியாளரிடம், ஒரே இடத்தில் மண் அள்ளுவது குறித்து சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், விவசாயத்திற்கு நீர் திறக்கப்படும் மதகுப்பகுதி 40 அடி உயரத்திற்கு மேல் உள்ளது. ஒரே இடத்தில் மண் அள்ளுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும். கண்மாயில் பரவலாக 5 அடி ஆழம் மட்டுமே மண் எடுக்கவும், ஆழமான பகுதியை சமப்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி