பெரியாறு அணையில் வெளியேற்றும் நீரை குறைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் அமைப்பினர் மனு அளித்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 520 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.ஆண்டிபட்டி தாலுகா மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி விவசாயிகள் வழங்கிய மனுவில், 'மயிலாடும்பாறை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பால்மாடு பராமரிப்பு கடன், பயிர்கடன் வழங்குவதில்லை. இதுபற்றி கேட்டால் பணம் இல்லை என கூறிகடன் தர காலதாமதம் செய்கின்றனர். கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'. என்றிருந்தது.கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு ஆயக்கட்டு நீரினைப்பயன்படுத்துவோர் சங்க தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் வழங்கிய மனுவில், 'கூடலுார் முதல் முத்துத்தேவன்பட்டி வரை 14 ஆயிரம் ஏக்கர் நஞ்னை நிலங்கள் பயனடைகின்றன. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு இன்னும் 90 நாட்களுக்கு மேல் நீர் தேவைப்படுகிறது. இதற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது எடுக்கப்படும் நீரின் அளவை குறைத்து எடுத்தால் தான் நஞ்சை பயிர்களை காப்பாற்ற இயலும்.வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என இருந்தது. மயான பாதை மீண்டும் ஆக்கிரமிப்பு
ஆண்டிபட்டி தாலுகா, உப்புத்துறை பொதுமக்கள் சார்பாக கிராம பொறுப்பாளர்கள் அணார், வேம்புலு, முனியாண்டி வழங்கிய மனுவில், 'கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்லும் ஓடையில் இறந்தவர்களை கொண்டு செல்லும் சூழல் உள்ளது. தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் பாதையை அடைத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தனர்.அகமலை ஊராட்சி துணைத்தலைவர் ஒச்சாத்தேவர் மனுவில், 'சொக்கநிலை முதல் மருதையுனுார் வரை ரோடு அமைக்க உத்தரவு வந்துள்ளது. ஆனால், வனத்துறையினர் ஆணை கிடைக்கவில்லை என்கின்றனர். ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றிருந்தது.தேவதானப்பட்டி பிரேம்குமார் வழங்கிய மனுவில், தேவதானப்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடை பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. புதிய கடை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரினார்.ஓடைப்பட்டி மேலப்பட்டி பூங்காதெரு செல்வம் வழங்கிய மனுவில், 'தங்கள் பகுதியில் ரோடு, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பொதுமக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர' கோரினார்.உத்தமபாளையம் சுதர்சனா மனுவில், 'திண்டுக்கலை சேர்ந்த சுரேஷ் என்பவரை 2011ல் திருமணம் செய்தேன். எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கணவர் இறந்தார். பின் உத்தமபாளையத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தேன். எனது தாய் என்னிடம் இருந்த பணம், நகைகளை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். தங்க இடமின்றி தவித்துவருகிறோம். தங்குவதற்கும், எனது குழந்தைகள் பள்ளி செல்லவும் உதவிட வேண்டும்' என இருந்தது. கூட்டத்தால் தள்ளுமுள்ளு
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க அதிக பொதுமக்கள் வந்திருந்தனர். பலர் டோக்கன் எண் வரிசையாக வராமல் மனுக்கள் பதியும் இடத்தில் குவிந்தனர். இதனை போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரும் நாட்களில் கூட்டத்தை ஒழுங்கு படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.