உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது விவசாயிகள் கலெக்டரிடம் மனு

கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது விவசாயிகள் கலெக்டரிடம் மனு

தேனி: மயிலாடும்பாறை பெரியகுளம் கண்மாய் பாதுகாப்பு கருதி இனி வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க கூடாது என கண்மாய் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் மனு அளித்தனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.மயிலாடும்பாறை மேல்வகை நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் கருத்தபாண்டி தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் பாஸ் மூலம் 80 சதவீத மண் எடுக்கப்பட்டு விட்டது. தற்போது கண்மாய் கரை பலவீனமாக உள்ளது. கரையை பலப்படுத்த வேண்டும். கண்மாயில் இதற்கு மேல் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது. மேலும் வைகை ஆற்றில் இருந்து கண்மாயிக்கு நீர் வரும் வாய்க்காலில் உள்ள நரசிம்மன் அணை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும்', என கோரினர்.ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சி ஏகன்ராஜபோர்டு குடியிருப்போர்கள் சந்திரன் தலைமையில் வழங்கிய மனுவில், 'கிராமத்தினர் பட்டா நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் பாதை கம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிக்குள் உள்ளது. இதனை பலதலைமுறைகளாக பயன்படுத்துகிறோம்.தற்போது அந்த பாதையை பயன்படுத்தினால் வனத்துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறுகின்றனர். பாதையை பயன்படுத்த அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இருந்தது.பகுஜன் சமாஜ்கட்சி மாவட்ட செயலாளர் ரெட் உள்ளிட்ட கட்சியினர் வழங்கிய மனுவில், பஞ்சமி நிலங்களை மீட்டு, அதனை வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க கோரினார்.அங்கன்வாடி பணிக்கு மனுக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக அளவில் பொதுமக்கள் மனு அளிப்பார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் நேற்று நடந்த கூட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி