மழை, பனி, குளிர் சீதோஷ்ண நிலையால் பரவும் காய்ச்சல்
கம்பம்; கம்பம் பள்ளத்தாக்கில் சாரல் மழை, காலை பனி , குளிர் என குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை தொடர்வதால் காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வானம் மேகமூட்டமாகவே உள்ளது. சூரிய வெளிச்சம் அவ்வப்போது தலைகாட்டுகிறது. கடந்த சில வாரங்களாக சாரல் மழையுடன், அதிகாலை பனி, குளிர் என ஜில் சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்போது காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனால் தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறுகையில், ' தற்போது பரவும் காய்ச்சல் 3 நாட்களுக்கு பிரச்னை இல்லை. நான்காவது நாள் காய்ச்சல் தொடர்ந்தால் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் காய்ச்சல் என வருபவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. ரத்தம் சேகரித்து டொம்புச்சேரியில் உள்ள பொதுச் சுகாதாரத் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றோம். அங்கு டெங்கு, உன்னி காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு என அனைத்து வகையான காய்ச்சல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் அதற்கேற்ற சிகிச்சைகள் மேற்கொள்கின்றோம். எனவே காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை,' என்றனர்.