சுற்றுலா வேன் கவிழ்ந்து ஐந்து பேர் காயம்
மூணாறு : மூணாறுக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பிய கர்நாடகா மாநில பயணிகள் பயணித்த வேன் கவிழ்ந்து ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 11 பேர் கொண்ட குழு மூணாறுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறு பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை பார்த்த பிறகு நேற்று ஆலப்புழா சென்றனர். அடிமாலி அருகே மச்சிப்பிளாவ் பகுதியில் நேற்று மதியம் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதியினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.