இனிப்பு, காரத்தில் கூடுதலாக செயற்கை நிறமி சேர்க்க கூடாது உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
தேனி: தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, காரம் தயாரிப்பில் கூடுதலாக செயற்கை நிறமி சேர்க்க கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறையினர் கருத்தரங்கில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராகவன் பேசினார்.மாவட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் தேனியில் நடந்தது. மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் பேசுகையில், ''தீபாவளியை முன்னிட்டு திருமண மண்டபங்கள், தனியார் இடங்களில் இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் உணவுப்பாதுகாப்புத்துறையில் கட்டாயம் பதிவு சான்று பெற வேண்டும். அரசு பரிந்துரை செய்துள்ள அளவை விட கூடுதலாக செயற்கை நிறமிகளை இனிப்பு, கார வகைகளில் சேர்க்க கூடாது. விற்பனை செய்யும் பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி அச்சிட வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.உணவு தயாரிக்கும் இடங்களில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். விதி மீறல்கள் சோதனையில் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தனியார் அமைப்பை சேர்ந்த பாண்டீஸ்வரன் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கினார். துறை அலுவலர்கள் பாண்டியராஜன், சக்தீஸ்வரன், ஜனகர்ஜோதிநாதன், மணிமாறன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.