ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு அவசியம்
தேனி: : மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஓட்டல்களில் ஆய்வு செய்வது குறைந்துள்ளது. இதனால் பல ஓட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காகவும், கேரள மாநிலம் செல்லவும் பலர் வருகை தருகின்றனர். இது தவிர மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்படுகின்றன. இதில் அசைவ ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இதில் சில ஓட்டல்களில்முதல் நாள் மீதமான இறைச்சிகள், உணவுகளை மறுநாள் சூடேற்றி விற்பனை செய்கின்றனர். இவ்வாறான உணவுகளை சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பால் அவதிக்கு உள்ளாவது தொடர்கிறது. அதே போல் தமிழகத்தில் முட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மையோனஸ் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணெய்களை பயன்படுத்தி மையோனஸ் தயாரித்து வருகின்றனர். அதிலும் சிலர் தரமற்ற எண்ணெய்களை பயன்படுத்தி மையோனஸ் தயாரிக்க துவங்கி உள்ளனர். இதனால் சில கடைகளில் மையோனஸ் சாப்பிடும் போது துர்நாற்றம், குமட்டல் ஏற்படுகிறது.மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஓட்டல்களில் முறையாக ஆய்வு செய்து பொது மக்கள் உடல்நிலையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.