சுருளி அருவியில் 25 இடங்களில் குப்பைத்தொட்டிகள் அமைப்பு
கம்பம், : சுருளி அருவிக்கு தினமும் வரும் சுற்றுலாப் பயணிகளால் அவர்கள் போடும் குப்பையை சுத்தம் செய்யும் பணிகளில் 'தீர்த்தம் டிரஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பு இறங்கியுள்ளது.தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி பிரதான இடத்தை பிடிக்கிறது. சுற்றுலா தலம் மட்டும் இன்றி ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அருவியில் குளிக்க தினமும் நுாற்றுக் கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் கொண்டு வரும் சாப்பாடு, ஸ்நாக்ஸ் உணவுகளை சாப்பிட்ட பின்னர் மீதமுள்ள உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகள், பாலிதீன் பொருட்களை அப்படியே வீசி விட்டு செல்கின்றனர்.சேகரமாகும் குப்பையை சுத்தம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. கம்பத்தை சேர்ந்த தீர்த்தம் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு குப்பையை சுத்தம் செய்யும் பணிகளை செய்ய துவங்கி உள்ளது. மேலும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே 25 குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளது. நேற்று காலை டிரஸ்ட் நிர்வாகிகள் உதயகுமார், சதிஷ் குமார், சூரத் உள்ளிட்ட 30 பள்ளி மாணவர்கள் அருவியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.