ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு ஆடு விற்பனை
ஆண்டிபட்டி,: தைப்பொங்கலை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வாரச்சந்தையில் நேற்று ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.ஆண்டிபட்டி பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடும் வார சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். வெளியூர்களில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். தைப்பொங்கல், ஆடி, தீபாவளி பண்டிகை நாட்களில் தேவை அதிகரிப்பால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். நேற்று நடந்த ஆட்டு சந்தையில் 1000க்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கிலோ ரூ.600 முதல் 700 வரை விலை நிர்ணயத்தில் ஆடுகளை மதிப்பீடு செய்து பலரும் வாங்கிச் சென்றனர். வியாபாரிகள் அதிகம் வந்திருந்ததால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. நேற்று ஒரே நாளில் ரூபாய் ஒருகோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.