உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்

தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் மூடல் அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்

தேவதானப்பட்டி : அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒரே தூய்மை பணியாளர் மட்டுமே உள்ளதால், சாக்கடை தூய்மையின்றி கொசுக்கடியால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் ஒன்றியம், அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி, ராமர் கோயில் தெரு, மேற்கு தெரு, சாவடி தெரு, சமூதாயக்கூடம் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உட்பட 6வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சிறிய ஊராட்சியாக இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். இங்குள்ள ஆண்கள், பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இரண்டும் பயன்பாடின்றி உள்ளது. இதனால் சிலர் ரோட்டோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் பொது சுகாதாரம் மோசமாக உள்ளது. சமுதாயக்கூடம் தெரு உட்பட பல இடங்களில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் நிரப்புவதில் கண்காணிப்பு இல்லை. தொட்டி நிரம்பிய பிறகு, திருகுகளை அடைக்க தாமதம் ஆவதால் தினமும் குடிநீர் தொட்டியில் நீர் நிரம்பி அரைமணிநேரம் குடிநீர் வீணாகிறது. ரோட்டோரம் புதர் மண்டியுள்ளதால் இரவில் தினமும் வீடுகளுக்குள் விஷ பூச்சிகள் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதி சடங்கிற்கு தண்ணீர் சுமந்து செல்லும் நிலை உள்ளது.

குண்டும், குழியுமான ரோடு

பாலாஜி, ஆட்டோ டிரைவர் அழகர்நாயக்கன்பட்டி: அழகர்நாயக்கன்பட்டியிலிருந்து 2 கி.மீ., தூரம் வேல் நகர், பெரியகுளம் தேவதானப்பட்டி செல்லும் இணைப்பு ரோடு பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால் மாணவர்கள், சைக்கிள், டூவீலர், ஆட்டோவில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டினால் டயர் பஞ்சராகி மூன்று முறை மாற்றியுள்ளேன். இதனால் பெரியகுளம் பகுதி பள்ளி செல்வதற்கு தினமும் 6 கி.மீ., தூரம் வெள்ளக்கரடு முனியாண்டி கோயில் வழியாக பைபாஸ் ரோட்டில் பெரியகுளம் செல்லும் நிலை உள்ளது. ரோட்டின் நிலை அறிந்து ஆம்புலன்ஸ் வர மறுக்கிறது. சாக்கடை சுத்தம் செய்யாததால் கொசுக்கடியால் அவதிப்படுகிறோம்.

தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்

ராஜம்மாள், சமுதாயக் கூடம் தெரு, அழகர்நாயக்கன்பட்டி: சமுதாயக்கூடம் தெருவில் பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகிறோம். ஊருக்கு நடுவே செல்லும் ஓடையில் மழை காலங்களில் வேல்நகர் கரட்டிலிருந்து வரும் காட்டுவாரி தண்ணீர் சிறுகுளம் வாய்க்காலில் கலக்கிறது. இந்த ஓடை பராமரிப்பில்லாமல், பாலீதீன் கவர்கள், புதர் மண்டி உள்ளது. மழை காலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் வரும் நிலை உள்ளது. தேவதானப்பட்டி, பெரியகுளத்திலிருந்து டூவீலரில் வரும் சில சமூக விரோதிகள் பைபாஸ் ரோட்டில் ரெய்டு செய்யும் போலீசாரிடம் தப்பித்துக்கொள்வதற்கு, அதிவேகமாக அழகர்நாயக்கன்பட்டி வழியாகசெல்கின்றனர்.

பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம்

அழகர்சாமி, அழகர்நாயக்கன்பட்டி: ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்துள்ளதால் மழை காலங்களில் மேற்கூரையில் இருந்து விழும் தண்ணீர் அரிசி, பருப்பு, ஜீனி மூட்டைகளில் விழுந்து நனைகிறது. புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள படித்த இளைஞர்கள் பயன்பெற உடற்பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !