குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கம்பம்: குடிநீரில் சரியான விகிதத்தில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்களை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.மாவட்டத்தில் ஒரு வாரமாக சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் காணப்படுகிறது. மேக மூட்டம், சாரல் மழையும், பனிப்பொழிவு ஆக உள்ளது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதனால் வெயில் இல்லை. இச் சூழலால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.காய்ச்சல் பாதிப்பு பற்றி வெளியே தெரிய கூடாது என அதிகாரிகள் பாதிப்பு விபரங்களை தெரிவிப்பது இல்லை. இந்நிலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவும் என்பதால், குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுத்துகின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்கள் வினியோகிக்கும் குடிநீரில் குளோரின் அளவு சரியான விகிதத்தில் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் கலப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யவும், ஊராட்சி செயலர்கள் கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் குடிநீரில் உரிய விகிதத்தில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா என்பதை திடீர் சோதனை மூலம் கண்டறியவும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளது.