ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலை துறை பாரபட்சம்; வர்த்தகர்கள் குற்றச்சாட்டு
கம்பம்; கம்பம் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கம்பம் மெயின்ரோட்டில் ஆண்டிற்கு இரண்டு முறை நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு அகற்றுவதும், பின் மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் முளைப்பதும் வாடிக்கையாகும். 2 மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையில் கலெக்டர் அதிருப்தி தெரிவித்ததால் மீண்டும் ஆக்கிரமிப்புக்கள் அகற்ற நெடுஞ்சாலைத் துறை தீபாவளிக்கு முன் வந்தது. ஆனால் எம்.எல். ஏ., மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளி முடிந்த பின் ஆக்கிரமிப்புக்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை சம்மதித்தது. ஆனால் இரண்டு பக்கமும் சர்வே செய்து அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் நவ . 12 ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துவங்கியது . ஆரம்பத்தில் சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றிய நெடுஞ்சாலைத் துறை நகரின் மையப்பகுதியில் குறிப்பாக சேனை ஓடையிலிருந்து காந்தி சிலை வரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக வர்த்தர்களில் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர். பெயரளவிற்கு வேலை பார்க்காமல் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ள உதவி செயற்பொறியாளருக்கு , தேனி கோட்ட பொறியாளர் அறிவுறுத்த வேண்டும் என கோருகின்றனர்.