வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறியும் பணி தீவிரம்
கம்பம்: வீடுவீடாக சென்று தொழுநோய் உள்ளதா என்று கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணி ஆக. 20 வரை நடைபெறும் என்று துணை இயக்குநர் ரூபன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் முதல் கட்டமாக தொழு நோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆறு மாத இடைவெளியில் தற்போது மீண்டும் தொழு நோய் கண்டறியும் பணி துவங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் கோம்பை, ஓடைப்பட்டி, டொம்புச்சேரி, கண்டமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இப் பணி நடைபெறுகிறது. ஆக. முதல் தேதி முதல் ஆக 20 வரை நடைபெறுகிறது. வீடு வீடாக சென்று தொழு நோய் உள்ளதா என்று சர்வே செய்து வருகின்றனர். தொழு நோய் தடுப்பு துணை இயக்குநர் ரூபன் கூறுகையில், 'மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் 529 குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு சூப்பர்வைசர் உள்ளார். சந்தேகப்படும் வீடுகளுக்கு அவர் நேரில் சென்று பார்ப்பார். இதன் மூலம் தொழு நோய் கண்டறிந்து முழுமையாக தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றார். பேரூராட்சி பகுதிகளில் மஸ்தூர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.