| ADDED : நவ 18, 2025 04:38 AM
மூணாறு: சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் ஆய்வு செய்தார். இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு அருகே சத்திரம், புல்மேடு வழியாக பாரம்பரிய வனப்பாதையில் நடந்து சபரிமலை செல்லலாம். சத்திரத்தில் இருந்து சன்னிதானம் வரையிலான 12 கி.மீ., துாரம் உள்ள வனப்பாதையை சபரிமலை மண்டல கால மகரவிளக்கு உற்ஸவ காலங்களில் மட்டும் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வழியில் நடந்து செல்ல நேற்று முன்தினம் முதல் ஐயப்ப பக்தர்கள் சத்திரம் வரத் துவங்கினர். கடந்தாண்டு முதல் நாளில் 412 பக்தர்கள் புல்மேடு வழியாக சென்றனர். சபரிமலை செல்ல சத்திரத்தில் முன்பதிவு செய்ய கடந்தாண்டு இரண்டு கவுண்டர்கள் இருந்த நிலையில், தற்போது மூன்றாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தவிர சத்திரத்தில் 23 போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆகியோர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 'மெட்டல் டிடெக்டர்' மூலம் பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பிளாஸ்டிக் பாட்டில் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்து. அது தொடர்பாக வனத்துறையினர் சோதனை நடத்துவர். சத்திரம் முதல் புல்மேடு வரை வனத்துறை சார்பில் ஆறு இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் வனத்தினுள் கடந்து செல்லும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. சத்திரம், புல்மேடு வனப்பாதையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் ஆய்வு நடத்தி, உறுதி செய்தார்.