குமுளி மலைப்பாதையில் ரோந்து செல்ல வலியுறுத்தல் - சபரிமலை சீசன் வரை தொடர வேண்டும்
கூடலுார்: சபரிமலை சீசன் முடியும் வரை குமுளி மலைப்பாதையில் வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். தமிழக கேரளாவை இணைக்கும் குமுளி மலைப் பாதை 6 கி.மீ., தூரம் கொண்டதாகும். மலைப்பாதையில் காட்டு யானை தொந்தரவு இல்லை. ஆனால் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்களில் செல்பவர்கள் உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை மலைப்பாதையில் வீசி விட்டு செல்கின்றனர். இதனை சாப்பிடுவதற்கு குரங்குகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இக் குரங்குகளால் நடந்து செல்லும் பக்தர்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது.பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக சபரிமலை சீசன் முடியும் வரை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து குப்பை கழிவுகளை பிளாஸ்டிக் சாக்குகளில் வைத்து மலைப்பாதையில் வீசிவிட்டு செல்வதும் தொடர்ந்துள்ளது.