கடமைக்காக அமைத்த ஜல்ஜீவன் திட்ட குடிநீர் பகிர்மான குழாய்கள்; நாகலாபுரத்தில் வீணான அரசு நிதி
தேனி: 'தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரத்தில் அமைக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்ட பகிர்மான குழாய்கள் காட்சி பொருளாக உள்ளன. இதனால் இக்குழாய்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட நிதி வீணாகிறது.' என, கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.கிராமப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் தவிர அனைத்து ஒன்றியங்களிலும் இத்திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டன. ஆனால் பல ஊராட்சிகளில் அந்த குழாய்களில் குடிநீர் வழங்குவது என்பது கானல் நீராக உள்ளது. தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி, நாகலாபுரம் ஊராட்சிகளில் இத்திட்டத்தில் ஓராண்டிற்கு முன் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சிகளில் கேட்டாலும் உரிய பதில் இல்லை என்பது பொது மக்களின் குமுறலாக உள்ளது. வீணான அரசு நிதி:
நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் கூறுகையில், 'ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் தெருவில் உள்ள பொதுக் குழாய்களில் மட்டும் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு குழாய் அமைக்கப்பட்டாலும் பயன் இல்லை. இதற்காக அரசு செலவிட்ட தொகை வீணாகி உள்ளது. குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடு இன்றி தெருக்களில் காட்சி அளிக்கின்றன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.', என்றார்.