பிரசவத்தில் குழந்தை இறந்ததால் அரசு டாக்டரை கண்டித்து முற்றுகை போடி மருத்துவமனையில் இணை இயக்குனர் விசாரணை
போடி: போடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் குழந்தை பலியானது என டாக்டரை கண்டித்து முற்றுகையிட்டனர். இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் சரண்யா 24. இவருக்கும் கம்பம் ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த நல்லதம்பி 25. என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சரண்யா கர்ப்பமாக இருந்ததால் தாயாரின் வீட்டில் இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது பணியில் இருக்க வேண்டிய டாக்டர் சுகந்தி பணிக்கு வரவில்லை என்றும், மறுநாள் காலை டாக்டர் காயத்ரி கண்ணம்மாள் வந்து சிசேரியன் மூலம் பிரசவம் நடந்தது. இதில் கர்ப்பிணி வயிற்றில் தண்ணீர் குடம் உடைந்ததால் சிசுவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் புகார் கூறினர். இரவில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத டாக்டரை கண்டித்து சரண்யாவின் உறவினர்கள் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டனர். தலைமை மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இது குறித்து மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி நேற்று சம்பந்தப்பட்ட டாக்டரிடம் விசாரணை நடத்தினார்.