உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டெப்போவிற்குள் செல்லாமல் சென்ற கேரள அரசு பஸ்: திரும்ப அழைத்த அதிகாரியால் பயணிகள் அவதி

டெப்போவிற்குள் செல்லாமல் சென்ற கேரள அரசு பஸ்: திரும்ப அழைத்த அதிகாரியால் பயணிகள் அவதி

மூணாறு: மூணாறில் அரசு பஸ் டெப்போவிற்குள் செல்லாமல் 10 கி.மீ., துாரம் சென்ற கேரள அரசு பஸ்சை திருப்பி வரவழைத்த அதிகாரியின் செயலால் பயணிகள் அவதியுற்றனர். ஆலப்புழா டெப்போவில் இருந்து ஆலப்புழா முதல் மூணாறு இடையே அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் நேற்று காலை 8:45 மணிக்கு மூணாறில் இருந்து ஆழப்புழாவுக்கு புறப்பட்டது. பஸ்சை புதிய டிரைவர் என்பதால் பழைய மூணாறில் உள்ள டெப்போவுக்கு செல்வதை மறந்து 10 கி.மீ., துாரம் பஸ் சென்றது. டெப்போவுக்கு பஸ் வராததால், அதனை குறித்து டெப்போ அதிகாரி விசாரித்தார். டெப்போவுக்கு வராமல் பஸ் சென்றதாக தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த அதிகாரி ஆலப்புழா டெப்போவை தொடர்பு கொண்டு பஸ் டிரைவரின் அலைபேசி எண்ணை பெற்றார். டிரைவரை தொடர்பு கொண்ட அதிகாரி ஆலப்புழா செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் டெப்போவில் காத்திருப்பதாக கூறி பஸ்சை திரும்பி வருமாறு அழைத்தார். அப்போது டெப்போ செல்லாமல் வந்த தனது தவறை உணர்ந்த டிரைவர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி டெப்போவுக்கு பஸ்சை ஓட்டி வந்தார். டெப்போவில் ஆலப்புழா உள்பட பிற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் யாரும் காத்திருக்கவில்லை என, தெரியவந்தது. பயணிகளின் நேரம், பஸ்சில் டீசல், வருவாய் ஆகியவை விரயம் ஆனது. டெப்போ அதிகாரியின் செயலால் அவதியுற்ற பயணிகள் ஆத்திரத்தில் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி