தேனி மாவட்டத்தில் குவியும் கேரள சுற்றுலா பயணிகள் - டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிய அப்பாச்சி பண்ணை
கூடலுார்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையால் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு கேரளா சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கூடலுார் அருகே உள்ள அப்பாச்சி பண்ணையில் அதிகம் குவிந்துள்ளனர். கூடலுார் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அப்பாச்சி பண்ணை. அங்குள்ள திராட்சைத் தோட்டங்களை காண்பதற்கு கேரள சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இதன் எதிரொலியாக அப்பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகரித்தன. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் புதிதாக ஏற்படுத்தியுள்ளனர். தற்போது பென்னிகுவிக்கின் சிலை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு சுற்றுலாபயணிகளுக்கு புரியும் வகையில் காட்சிப்படுத்தும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வர உள்ளன. திராட்சை விவசாயத்தை அழிக்காமல் 'ஸ்கை அவஞ்சர்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரள சுற்றுலா பயணிகள் அப்பாச்சி பண்ணையில் அதிகம் குவிந்துள்ளனர். திராட்சைத் தோட்டமாக இருந்த இப்பகுதி தற்போது 'டூரிஸ்ட் ஸ்பாட்' ஆக மாறி உள்ளது.