கொச்சி- தனுஷ்கோடி சாலை விரிவாக்க பணிக்கு தடை; பா.ஜ., பிரமுகர் வீடு முற்றுகை
மூணாறு; கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தடை ஏற்பட பா.ஜ. பிரமுகர் காரணம் என கூறி, அவரது வீட்டை இளைஞர் காங்., அணியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளாரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு வனத்தின் வழியாக கடந்து செல்கிறது. அப்பகுதியில் மத்திய அரசின் அனுமதி இன்றி விதிமீறி பணிநடப்பதாக தொடுபுழாவைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரும், சூற்றுச் சூழல் ஆர்வலருமான ஜெயசந்திரன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட பகுதி வனப்பகுதிக்கு உட்பட்டது என கேரள தலைமை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதனை மேற்கோள் காட்டி நேரியமங்கலம், வாளரா இடையே ரோடு பணிகள் செய்ய தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் ரோடு பணிகள் முடங்கியது. அதற்கு பா.ஜ.க. பிரமுகர் ஜெயசந்திரன் காரணம் என கூறி, அவரது வீட்டை இளைஞர் காங்கிரஸ் அணியின் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது வீட்டின் முன்புற கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.தொடுபுழா தொகுதி தலைவர் பிலால்சமத் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் அன்சாரி துவக்கி வைத்தார். தேவிகுளம் தொகுதி தலைவர் அனில்கனகன், மாவட்ட பொது செயலாளர்கள் பிபின்அகஸ்டின், ஷானுசாகுல், ஹசன் சுலைமான் உட்பட பலர் பங்கேற்றனர். இச்சம்பவத்தில் 25 க்கும் மேற்பட்டோர் மீது தொடுபுழா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.