உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை, கழிவுநீர் அகற்றாததால் சுகாதார சீர்கேடு மேலச்சொக்கநாதபுரத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

குப்பை, கழிவுநீர் அகற்றாததால் சுகாதார சீர்கேடு மேலச்சொக்கநாதபுரத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனியில் ரோடு, சாக்கடை, தெரு விளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே மேலச்சொக்கரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு வினோபாஜி காலனியில் காந்தி தெரு, விநாயகர் கோயில் தெரு, கருப்பசாமி கோயில் தெரு, ஹாஸ்டல் தெரு உள்ளிட்ட தெருக்கள் அடங்கி உள்ளன. 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், மண் மேடாகவும் உள்ளது. சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருக்களில் குப்பை அகற்றாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.இப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது :

எரியாத தெருவிளக்குகள்

சிவா, வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம் : முத்து விநாயகர் கோயில் தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து உள்ளது. பாதாள சாக்கடைக்கான சிலாப்புகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் டூவீலரில் செல்லும் போது விபத்து ஏற்படுகின்றன. சாக்கடை வசதி இன்றி மழைக் காலங்களில் கழிவுநீர் தேங்கி நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். மின் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதால் தெருக்களில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். ரோடு, தெருவிளக்கு வசதிகள் செய்து தர பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி ஊர்வலம் செல்வதில் சிரமம்

வீராச்சாமி, வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம் : 2 வது தெருவில் ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும். குழிமாக உள்ளது. சாக்கடை தலைப்பாலம் சேதம் அடைந்து வாகனம் செல்ல முடியாத அளவிற்கு பள்ளமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல மக்கள் சிரம்ம் அடைந்து வருகின்றனர். தெருவின் மையத்தில் பாதாள சாக்கடை சிலாப்புகள் உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சேதம் அடைந்த சாக்கடை தரைப் பாலத்தை சீரமைப்பதோடு, உயரமான சிலாப்புகளை சரி செய்து ரோடு வசதி செய்து தர வேண்டும்.

குப்பை அகற்றாமல் எரிப்பு

அழகுமலை, அப்துல் கலாம் நகர்,மேலச்சொக்கநாதபுரம் : வினோபாஜி காலனி - மேலச்சொக்கநாத புரம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் உள்ளது. மது குடிப்போர் ரோட்டில் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு செல்கின்றனர். இதனை பேரூராட்சி அகற்றாமல் தீ வைத்து விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தெருவிளக்கு இல்லாததால் இரவில் போதை ஆசாமிகள் தொந்தரவு அதிகம் உள்ளது. ரோட்டில் தேங்கிய பிளாஸ்டிக், குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை