முன்னாள் மனைவியை 2வது திருமணம் செய்தவரை கொன்ற பெயின்டருக்கு ஆயுள்
தேனி:தேனியில் முன்னாள் மனைவியை 2வது திருமணம் செய்தவரை கொலை செய்த பெயின்டர் கணவன், மகன், உறவினர் ஆகியோருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி 44. இவருக்கும் திண்டுக்கல் சின்னாளபட்டி பெயின்டர் நாகராஜூக்கும் 58, சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருச்செந்துாரில் வசித்தனர். நாகராஜ் உறவினர் துாத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த பெயின்டிங் கான்ட்ராக்டர் பரமசிவத்திடம் வேலை செய்தார். அப்போது மகேஸ்வரிக்கும், பரமசிவத்துக்கும் 58, கள்ளத்தொடர்பு இருப்பதாக நாகராஜ் சந்தேகப்பட்டார். அவர் மனைவியுடன் தகராறு செய்தார்.இதனால் கணவர் நாகராஜை மகேஸ்வரி விவாகரத்து செய்தார். அதன்பின் பரமசிவம், மகேஸ்வரியை 2வது திருமணம் செய்தார். இதனால் முதல் கணவர் நாகராஜ், அவரது உறவினர்களும் அலைபேசியில் மகேஸ்வரியை மிரட்டினர்.2020ல் மகேஸ்வரி, பரமசிவம் தேனி மிரண்டா லைன் பகுதியில் குடிபெயர்ந்தனர். 2020 நவ.,22 நாகராஜ், அவரது மகன் ஜெயசூர்யா 25, உறவினர் மகன் மணிகண்டன் 38,ஆகியோர் தேனி மகேஸ்வரி வீட்டிற்கு இரவு சென்று கதவை தட்டினர். கதவை திறந்த மகேஸ்வரி, பரமசிவத்தை கத்தியால் குத்தினர். இதில் பரமசிவம் இறந்தார். மகேஸ்வரி புகாரில் தேனி போலீசார் விசாரித்து நாகராஜ், ஜெயசூர்யா, மணிகண்டனை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். நாகராஜ் உட்பட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.