பேட்டரி தண்ணீரை மதுவில் கலந்து குடித்தவர் பலி
கூடலுார்:மஞ்சள் காமாலை நோயால் இறந்த நண்பரின் உடலுடன் ஆம்புலன்சில் சென்றவர் பேட்டரியில் இருந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்து பலியானார். கேரளா வண்டிப்பெரியாறைச் சேர்ந்தவர்கள் ஜோபி 40, பிரபு 40. இருவரும் நண்பர்கள். இவர்களது நண்பரான இதே ஊரைச் சேர்ந்த பிரதாப் 39, மஞ்சள் காமாலை நோயால் திருப்பூரில் இறந்தார். நண்பரின் உடலை திருப்பூரில் இருந்து வண்டிப்பெரியாறுக்கு தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு வந்தனர். குமுளியில் ஆம்புலன்சை நிறுத்தி டிரைவரும் உதவியாளரும் டீ குடிக்க சென்றனர். அந்த நேரத்தில் ஏற்கனவே மது போதையில் இருந்த ஜோபியும் பிரபுவும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேட்டரியில் இருந்த தண்ணீரை எடுத்து மதுவில்கலந்து குடித்துள்ளனர். இதில் ஜோபி சிறிது நேரத்தில் இறந்தார். பிரபு தீவிர சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.