உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரவில் டவுன் பஸ் வசதியின்றி பல கிராம மக்கள்... தவிப்பு: ஆண்டிபட்டியில் அரசு பஸ் டெப்போ அவசியம்

இரவில் டவுன் பஸ் வசதியின்றி பல கிராம மக்கள்... தவிப்பு: ஆண்டிபட்டியில் அரசு பஸ் டெப்போ அவசியம்

தேனி, பெரியகுளம், போடி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி, டெப்போக்களில் இருந்து ஆண்டிபட்டியை மையமாக வைத்து 30க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. விவசாயம், நெசவு மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களுக்காக பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் ஆண்டிபட்டிக்கு வந்து செல்கின்றனர். அதிகாலை 5:30 மணிக்கு முன்பும் இரவில் 10:00 மணிக்கு பின்பும் ஆண்டிபட்டியில் இருந்து எந்த ஊருக்கும் டவுன் பஸ் வசதி இல்லை. பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, சித்தார்பட்டி, பாலக்கோம்பை, ராமகிருஷ்ணாபுரம், ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மறவபட்டி, க.விலக்கு, வைகை அணை உட்பட பல கிராமங்களைச்சேர்ந்தவர்கள் தொழில், வியாபாரம் தொடர்பாக ஆண்டிபட்டி நகரில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். பகலில் வரும் பலரும் பணிகளை முடித்து இரவு 10:00 மணிக்கு பின் சொந்த கிராமத்திற்கு செல்கின்றனர். இரவில் டவுன் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. அதிகாலையில் வருபவர்களுக்கும் இதே சிரமம் உள்ளது. ஆண்டிபட்டியில் அரசு பஸ் டிப்போ வசதி இருந்தால் பயணிகளின் வசதிக்கேற்ப இரவில் டவுன் பஸ்கள் இயக்க முடியும். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை டவுன் பஸ்கள் எதுவும் நிறுத்தப்படுவதில்லை. டவுன் பஸ்களை பஸ்ஸ்டாண்டில் நிறுத்தி வைத்தால் அதிகாலை 12:00 மணி வரையும் அதிகாலை 5:00 மணியிலிருந்தும் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும். ஆண்டிபட்டியில் இருந்து 20 கி.மீ., தூரத்திற்கு அப்பால் உள்ள டெப்போக்களில் இருந்து டவுன் பஸ்கள் வந்து செல்வதால் அதற்கான செலவும் அரசுக்கு கூடுதலாகிறது. ஆண்டிபட்டியில் அரசு பஸ் டெப்போ அமைக்கவோ அல்லது அதிகாலை 12:00 மணி வரையும் அதிகாலை 5:00 மணி முதலும் டவுன் பஸ்கள் ஆண்டிபட்டியை மையமாக வைத்து இயக்கவோ நடவடிக்கை தேவை என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ